Sunday, May 9, 2010

புதுக் கவிதை

முரண்!

தேங்காய்
உடைக்கிறார்கள்
வாழ்க்கை
சிதறிப் போகமலிருக்க!
தேங்காய்
பொறுக்குகிறார்கள்...
வாழ்க்கையில்
சிதறிப் போனவர்கள்!

மறுபக்கம்...

எனதன்பின்
மிக மெல்லிய
விரல்களை
ஒடித்துச் சிதைத்து,
உன் நாவின்
சுவைக்கென
உருமாற்றுகிறாய்.

வக்கிரங்கள்
நிமித்தம்
வழிந்தோடும்
என் ரத்தங்கள் குறித்து,
உனக்கு வருத்தமேதுமில்லை.

குழந்தைப் பேறுக்கு பின்
தாய் என்பதனை
சதா எனக்குணர்த்தும்
உன்னால்
நீ தந்தை
என்பது மட்டும்,
ஏனோ
மறந்து போகிறது.

என்
ஆடை அலமாரியில்
எப்போதும்
ஒளிந்து கொண்டிருக்கும்
உன்
சந்தேகங்களின்
கண்களுக்கு
ஏனோ
தெரிவதில்லை
ஒரு போதும்
உன்
நிர்வாணம் பற்றி...

பூ

விதவையின் வெள்ளை நெற்றியில் முள்ளாய் குத்திய பூபெண்ணின் தாவணி கனவுகளில் மங்களமாய் மணக்கும் பூ!மரண சாலையில் -சுனாமி குவித்த பிணங்களாய் கசங்கி மிதிபடும் பூதிருப்பதியோ திருத்தணியோ தொட்டுவிட்டால் திருப் பிரசாதம் பூ!தெருக்களில் கூவி கூவி விற்றவளின்வயிற்றுப் பசிக்கு - உணவு தரும் பூபூ பூவென கத்தியவளின் -நிறைய நாள் பசியில் - முட்கள் பதித்த பூ!முழம் வாங்கி முடிந்து கொண்டதில் ஏழையின் வீட்டிலும் மணக்கும் பூஅழகும் மணமும் மிஞ்சிய செருக்கால் முட்களை தாண்டியும் பறிக்கப்படும் பூ!பூத்த இடத்தின் அடையாளம் தொலைத்து வைத்த இடத்தில் அதிகாரம் செய்யும் பூகாய் கனி மரமென தழைத்த - விதையின்முதல் நிர்வாணம் - பூ!


கனவு

கனவே கலையாதே...
கடைசி சந்திப்பு நிகழட்டும்
விடிந்தால் காதலிக்கு திருமணம்!

மரணப்பார்வை..!

ஏய் மரணமே!
நீ என்னை
தீண்டும் முன்
தாண்டிவிடுவேன் என்
வாழ்க்கைக்கான
வெற்றியின் தூரத்தை!
இருப்பினும்
உன்னை நான்
அதிகமாய் நேசிக்கிறேன்,
இப்பூமியின் மாந்தர்கள்
அனைவரையும் நீ
ஒன்றாய் கருதுவதால்...

ஏக்கம்!

கழனிகளில்
மாடி வீடுகள்...
ஏக்கத்துடன் பறவைகள்...
எப்படி இனி
உணவு கிடைக்கும்
இந்த மனிதர்களுக்கு?


விதவை

இதழ் இழந்த
மலராய் - மலர்
இழந்த மங்கை நான்.....

துக்கத்தை உணர்த்துவது
கறுப்பெனில் - வாழ்க்கையை
தொலைத்ததன் அடையாளம்
வெள்ளையா.....

தேடினேன் விடியலை
இருளில் - ஏற்ற விரும்பிய
விளக்கை அணைத்து அணைக்கவே
ஆர்வம் கொண்டனர் அனைவரும்.....

வேண்டாத ஆறுதலை,
ஆதரவை தருவதாய் - வெந்த
புண்ணில் வேல் பாய்ச்சினர்
வீட்டினர் கூட.....

மேகம்போல் வந்து
மேகமாய் மறைந்த மணாளன்
மின்னலாய் வந்து உயிர்
எடுத்தவன் எமன்.....
வானவில்லின் ஆயுளைப்போல்
வாழ்க்கையின் வசந்தங்கள்
மழை நின்ற வானமாய்
என் வாழ்க்கை.....


குழி

அவள்
என்னைப் பார்த்துச்
சிரித்தாள்
கன்னத்தில் குழி
விழுந்தது
நான் அவளைப் பார்த்துச்
சிரித்தேன்
வாழ்க்கையே
குழியில் விழுந்தது.


















No comments:

Post a Comment